இமயமலையில் பத்துநாட்கள் – 10 – வழி தெரியாமல் , அடர்ந்த காட்டில் தனியாக
Posted: August 10, 2010 Filed under: இமாலயப் பயணம் - SAR PASS TREKKING 1 Comment ».
அடுத்த CAMP அமைந்திருந்த இடத்தின் பெயர் GUNA PANI . CAMP -யை ஒட்டியே ஒரு அழகான அருவி கொட்டிக் கொண்டிருந்தது . இன்னும் இருட்டுவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இருக்கலாம் . கொஞ்ச தூரம் நடந்து வரலாம் என அருவியை , ஒட்டிய படியே நடந்து கொண்டிருந்தேன் . அருவியை ஒட்டி ஐந்து நிமிடத்திற்கு மேல் நடக்க முடியவில்லை . பாறைகள் , புதர்கள் என அடர்ந்திருந்தன . அருவியை விட்டு விலகி கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்தேன் . ஒரு இருபது நிமிடம் நடந்திருப்பேன் என நினைக்கிறேன் . சரி இதற்கு மேல் செல்லவேண்டாம் என முடிவெடுத்து திரும்பி நடக்க ஆரம்பித்தேன் .
கொஞ்ச தூரம் நடந்ததும் , நான் திரும்புகிற பாதை சரிதானா என்று சந்தேகம் வந்தது . கொஞ்சம் பதற்றமும் வந்தது . சரியான பாதையாகத்தான் இருக்கும் என்று நடந்து கொண்டிருந்தேன் . ஒரு முப்பது நிமிடங்கள் நடந்தும் , அருவியையோ , CAMP -யையோ காண முடியவில்லை .
என்ன செய்வது ? கையில் CELL PHONE இல்லை . கண்ணுக்கெட்டிய தூரம் வரை , சுற்றிலும் மரங்கள் மட்டும் தான் தெரிகின்றன . இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் இருட்டி விடலாம் . மிருகங்களிடமிருந்து தப்பித்தாலும் , இந்த குளிரே என்னைக் கொன்றுவிடும் .வெப்ப நிலை இரவு நேரங்களில் வெகு சாதரணமாக -5 டிகிரியை எட்டிவிடும் .
என்னை அமைதிப் படுத்த முயற்சிக்கிறேன் . முடியவில்லை . பயம் . மிருகங்கங்கள் அதிகம் இல்லாத காடு தான் என்றாலும் , பயமாகவே இருந்தது .
என்ன செய்யலாம் ? என்ன செய்யலாம் ? ஒன்றுமே புரியவில்லை . இது போன்றே ஒரு சம்பவம் எனக்கு எட்டு வயதில் , எங்கள் குடுப்பத்துடன் கிடா வெட்ட ஒரு மலையில் இருக்கும் கோவிலுக்குச் சென்றபொழுது நிகழ்ந்ததுண்டு .
இதை விட அதிகப் பயத்துடன் இருந்தேன் அப்பொழுது . கிடா வெட்ட மாட்டு வண்டியில் , அந்த மலை அடிவாரத்துக்குச் சென்றோம் . மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி அது . அந்த மலையை எங்கள் ஊரில் அப்பாச்சி கவுண்டர் மலை என அழைப்பார்கள் . அப்பாச்சி என்பது ஒரு வட்டார வழக்குச் சொல் . அதன் பொருள் அம்மாவின் தகப்பனார் .
அந்த மலையில் இலந்தை மரங்கள் அதிகம் . இலந்தை மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பொன்வண்டுகளும் அதிகம் இருக்கும் . வீடு திரும்பும் பொழுது கையில் நான்கு பொன்வண்டுகளாவது இருக்கவேண்டும் என முடிவுசெய்துதான் வீட்டிலிருந்தே கிளம்பி இருந்தேன் . பள்ளிக் கூடத்தில் , பொன் வண்டுகளைக் காட்டி நல்ல SCENE போடத் திட்டம் .
மலையேறும் பாதையில் பொன்வண்டுகளைத் துரத்திக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன் . அப்படி ஒரு பொன் வண்டை துரத்திக் கொண்டே சென்ற பொழுது , வழி தவறி கொஞ்ச தூரம் வந்து சென்றேன் . எப்படியும் பாதையைப் பிடித்து , கோவிலுக்குச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் , பொன் வண்டை துரத்தி , துரத்தி ஒரு வழியாகப் பிடித்து விட்டேன் . கையின் பொன்வண்டுடன் , சந்தோசமாக வந்த பாதையைத் தேடி நடந்தேன் . ஒரு இடத்தில் மூன்று பாதைகள் பிரிந்தன . இதில் எதன் பின் செல்வது எனத் தெரியவில்லை . கொஞ்சம் பெரிய பாதையாகத் தெரிந்த ஒன்றில் நடக்க ஆரம்பித்தேன் .கண்ணுக்கெட்டிய வரை எந்த மனிதர்களும் தென்படவில்லை . வழி தவிறிவிட்டேன் என்ற உண்மை உறைத்த பொழுது கண்களில் , தாரை தாரையாக கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது . முடிந்தவரை உயிரைக் கொடுத்துக் கத்தினேன் . யாருடைய காதுகளிலும் என் கத்தல் விழவில்லை . ஒன்று புரியவில்லை . எல்லாம் கனவு போல் தான் , நான் முழித்ததும் சரியாகிவிடும் என்று நினைத்தேன் . எதுவும் சரியவாகத் தெரியவில்லை . ஒன்று மட்டும் மனதில் தெளிவாக நம்பினேன் . மேல் நோக்கிய திசையோ , அல்லது இடது , வலது திசைகளிலோ நடந்தால் , மனிதர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவு . கீழ் நோக்கி நடக்க முடிவெடுத்தேன் .
கை , கால்கள் பயங்கரமாக நடுங்க , கண்களில் தாரை தாரையாக கண்ணீருடன் , கீழ் நோக்கி நடக்க ஆரம்பித்தேன் . நான் அலுத்து கொண்டே , கீழே இறங்குவதை , எங்கிருந்தோ கவனித்த , ஒரு ஆடு மேய்க்கும் மனிதன் , வேகமாக என்னை நோக்கி ஓடி வந்தான் . புதர்களில் சத்தம் வரவே , ஓட்டமெடுத்தேன் . அந்த மனிதன் , மலை வாழ் மக்களின் மொழியில் எதோ சொல்லி என்னை அழைத்தான் . ஒரு மனிதக் குரல் கேட்டதும் தான் எனக்கு உயிரே வந்தது .
அழுது கொண்டே , நடந்ததை , சொன்னேன் . இல்லை உளறினேன் . என் உளறல் அவனுக்கு முழுவதுமாக புரிந்திருக்க வாய்ப்பில்லை . இருந்தாலும் , நான் பேசிய ஒரு சில வார்த்தைகளை வைத்து , கோவிலுக்கு வந்த சிறுவன் , வழி தவறிவிட்டான் என்பதை புரிந்து கொண்டான் . எதோ ஒரு பெயரைச் சொல்லி கத்தினான் . ஐந்து நிமிடத்திற்கு பிறகு , அந்த இடத்திற்கு இன்னொரு ஆள் வந்தான் . அவனிடம் எதோ சொல்லி விட்டு , என் கைகளை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் . சிறுது தூரத்திலேயே , நான் மலையேறிக் கொண்டிருந்த பழைய பாதை வந்தது .
.
ஒரு நாற்பது நிமிட நடையில் , கோவிலை அடைந்தோம் . என்னை காணாமல் அங்கே பதற்றத்தில் இருந்த மாமா , என்னைக் கண்டதும் , அருகில் கிடந்த மாடு விரட்டும் சாட்டையை கையில் எடுத்து விளாசினார் . முதுகிலும் , கையிலும் சாட்டையின் பதிவுகள் . அந்த பதிவுகள் மறைய கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது .
இப்பொழுது எனக்கு தோன்றியது , அதே பழைய IDEA தான் . வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தேன் . வேகம் என்றால் பேய் வேகம் . ஒரு நாற்பது நிமிட ஓட்டத்திற்கு பிறகு , தூரத்தில் ஒரு மரவீடு தெரிந்தது . நேராகச் சென்று கதவைத் தட்டினேன் . ஒரு சிறுவன் வெளியே வந்தான் . ஒரு பத்து அல்லது பதினோரு வயது இருக்கும் அவனுக்கு .
அவன் எதோ கேட்டான் . எனக்கு இந்தி தெரியாது . அவன் கேட்டது இந்தியில் தானா என்று கூடத் தெரியவில்லை . அவன் பேசியது அவன் தாய்மொழியாகக் கூட இருந்திருக்கலாம் . நான் CAMP , ROUTE என்று இரண்டு வார்த்தைகளை மட்டும் , திரும்பத் திரும்பச் சொன்னேன் . நடந்த சம்பவங்களை சைகை மொழியில் விளக்கினேன் .
நான் வழி தவறிவிட்டேன் , வழி கேட்கிறேன் என்று ஒரளவு அவனுக்கு புரிந்துவிட்டது . இது தான் பாதை என்று , ஒரு திசையில் காட்டினான் . ஒரு இருபது ரூபாய் நோட்டை எடுத்து , அவன் POCKET -ல் திணித்து விட்டு , CAMP வரை வருமாறு சைகை காட்டினேன் .
ஒரு நிமிடம் என்பது போல் சைகை காட்டிவிட்டு , வீட்டிற்குள் சென்றான் . ஒரு நிமிடத்தில் , வெளியே வந்தவன் , செருப்பை போட்டுக் கொண்டு போலாம் என்று சைகை கட்டினான்.
அவனுடைய வேகத்திற்கு என்னால் நடக்க முடியவில்லை . ஆங்காங்கே ஓய்வெடுத்துக் கொண்டு நடந்தேன் . நடக்க ஆரம்பித்து ஒரு முப்பது நிமிடத்தில் , ஒரு மெல்லிய இருட்டு பரவ ஆரம்பித்தது .
நடக்க , நடக்க , சிறுது நேரத்தில் CAMP -ன் கூரைகள் கண்ணில் பட்டன . POCKET -லிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் கொடுத்தேன் . வாங்க மறுத்தான் . அவன் POCKET -ல் அந்த நோட்டைத் திணித்து விட்டு , நன்றி , நான் இனி போய்விடுவேன் என்று சைகை செய்தேன் .அவன் வந்த வழியே திரும்பினான் .
CAMP – உள்ளே வந்தேன் . எல்லாரும் வேடிக்கை , விளையாட்டு என மும்முரமாக இருந்தார்கள் . நேரே என் TENT -க்குள் நுழைந்தேன் .
உறங்கப் போகும் பொழுது தான் , CHANDY அல்லது RAM என்னைத் தேட ஆரம்பித்திருப்பார்கள் என்று நினைத்தபொழுது கொஞ்சம் மனது வலித்தது .
இனிமேல் எங்கே சென்றாலும் , நான் எங்கே செல்கிறேன் என யாரிடமாவது சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் . இன்னொன்று முடிந்தவரை , தனியே சுற்றுவதில்லை என முடுவுசெய்தேன் .
—-
மிகுந்த சுவாரஸ்யமான நடையுடன் கண்முன் விரிகிறது நீங்கள் நின்ற இடம்..
.மொத்தத்தையும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்…